ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் களைக்கட்டியுள்ளது. தற்போது லீக் சுற்றுப்போட்டிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் டு பிளசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆரம்பத்தில் பெங்களூரு அணியின் கை சற்று ஓங்கி இருந்தது. கொல்கத்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அணி ஒரு கட்டத்தில் 150 ரன்களை எட்டுமா என்பதே சந்தேகமாக இருந்தது. நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த அதிரடி மன்னன் ரஸல் முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் விழுந்ததால் கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். அப்போது கொல்கத்தா அணி 11.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பின்னர் களமிறங்கிய ஷர்துல் தாக்கூர் மிரட்டலான இன்னிங்ஸை வெளிப்படுத்தினார். சிக்ஸர், பவுண்டரிகளாக ஷர்துல் தாக்கூர் விரட்ட ரன்ரேட்டும் பின்னர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. ஈடன் கார்டனில் கொல்கத்தா ரசிகர்கள் உற்சாகமாகினர். அதிரடியாக ஆடிய ஷர்துல் 29 பந்துகளில் 68 ரன்களை குவித்தார். இதன்காரணமாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணியின் சார்பில் விராட் கோலி மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்த ஜோடி அணியின் ரன் ரேட்டை வேகமாக உயர்த்தியது. பெரிய இன்னிங்ஸை ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுனில் நரேன் சுழலில் கோலி விக்கெட்டை பறிக்கொடுத்தார். அதன்பின்னர் அந்த அணிக்கு இறங்குமுகம்தான். அடுத்த ஓவரிலே டூபிளிசஸ் விக்கெட்டை வருண் காலி செய்தார். கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

முடிவில் பெங்களூரு அணி 17 . 4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளும், சுயாஷ் சர்மா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 81 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது.
Leave a Reply
You must be logged in to post a comment.