பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். கேரள மாநிலத்தில் ஆலமரத்தடி திண்டில் படுத்திருந்தவரின் கழுத்துப்பகுதி வழியாக பாம்பு ஊர்ந்து சென்றது குறித்த வீடியோ ஒன்று, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், கொடுங்கலூர் பகுதியில் ஸ்ரீகுரும்பா பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோயில் வளாகத்தை ஒட்டி பெரிய ஆலமரம் உள்ளது. ஆலமரத்தைச் சுற்றி சதுர வடிவில் திண்டு கட்டப்பட்டு மார்பிள் கல் பதிக்கப்பட்டுள்ளது.

அந்த திண்டில் அமர்ந்து ஆலமரத்தின் நிழலில் மக்கள் இளைப்பாறுவது வழக்கம். இந்த நிலையில் முதியவர் ஒருவர் ஆலமரத்தடியில் உள்ள திண்டில் தூங்கியுள்ளார். வலது கையை மடக்கி தலையணையாக வைத்தபடி சரிந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் படுத்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த முதியவர் தனது தலைக்கு அருகிலேயே கறுப்பு பை ஒன்றையும் வைத்திருந்தார். அப்போது, திடீரென ஒரு பாம்பு தூங்கிக்கொண்டிருந்த முதியவரின் கழுத்து வழியாக ஊர்ந்து சென்றது. அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டதால் முதியவர் கண் விழித்து பார்த்தார்.

அப்போது பாம்பின் உடல் பகுதி முதியவரின் கழுத்தைத் தாண்டி சென்றதை பார்த்த அவர், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொண்டார். பாம்பு அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆலமரத்தடியைத் தாண்டி, அருகில் இருந்த புல்வெளி வழியாக ஊர்ந்து சென்றது.
பாம்பு தனது உடல் வழியாக ஊர்ந்து சென்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத முதியவர் அங்கிருந்து செல்ல முயன்றார். அங்கிருந்த வேறு சிலர் பாம்பு எங்கு செல்கிறது என கண்காணித்தனர்.

பின்னர் பாம்பு புதருக்குள் சென்று மறைந்துள்ளது. அந்த முதியவர் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியாகவில்லை. பாம்பு முதியவரின் கழுத்துப்பகுதி வழியாக செல்லும் காட்சியை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.