கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக கர்நாடக மாநில வேலைவாய்ப்பு சட்ட மசோதா 2024-ற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி, கர்நாடகாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் உள்ள குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் 100 சதவீதமும், நிர்வாகப் பதவிகளில் 50 சதவீதம், நிர்வாகமற்ற பதவிகளில் 75 சதவீதம் என்ற வகையில் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் அந்த மாநிலத்தில் பிறந்தவர், 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும்,
அந்த சட்ட மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு மட்டுமே தனியார் நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளில் 50 சதவீதமும், நிர்வாகமற்ற பதவிகளில் 75 சதவீதமும் பணி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், அம்மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், மசோதாவில் உள்ள விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், உள்ளூர் ஆட்களை வேளைக்கு அமர்த்தாத நிறுவனங்களுக்கு மசோதாவின் படி ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, இந்த சட்ட மசோதாவை விரைவில் சட்டபேரவையில் தாக்கல் செய்து சட்டமாக்க அம்மாநில அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த சட்ட மசோதாவிற்கு வணிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இருந்து விமர்சனங்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் கன்னடர்களுக்கு 100 சதவீத வேலைவாய்ப்பு அளிக்கும் மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, “தனியார் துறை நிறுவனங்களில் கன்னடர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான வரைவு மசோதா இன்னும் தயாரிப்பு நிலையில் உள்ளது.
அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, தமிழ்நாடு அரசும் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்,

இதுபோன்ற சட்ட மசோதாவை உருவாக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.