காஞ்சிபுரம் சாலைத்தெரு பகுதியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் சீருடை அணிந்த பெண் காவலரை அவரது கணவர் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவாகி விட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் டில்லிராணி (31). இவர் விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்தில் 2 ஆம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மேகநாதன் கணினி உதிரிபாகங்கள் விற்பனையாளராக இருந்து வருகிறார்.

இவர்கள் திருமணமாகி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். டில்லிராணி பணி முடித்து காஞ்சிபுரம் சாலைத்தெரு அருகில் வந்து கொண்டிருந்த போது கணவர் மேகநாதன் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வாக்குவாதம் முற்றியதால் மேகநாதன் தான் வைத்திருந்த கத்தியால் டில்லிராணியை பல இடங்களில் குத்தி தாக்கி விட்டு தலைமறைவாகி விட்டார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் பலத்த காயத்துடன் இருந்த டில்லிராணியை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மேகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் சீருடை அணிந்த பெண் காவலரை தாக்கியது அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.