சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவரது தாயார் கமலா ஆட்கொணர்வு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் மாறுபட்ட உத்தரவை பிறப்பித்தனர்.
இதை அடுத்து, இந்த வழக்கை 3-வது நீதிபதியான ஜி.ஜெயச்சந்திரன் கடந்த வாரம் விசாரித்தார். பின்னர், இந்த வழக்கை ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் டிவிசன் பெஞ்ச் விசாரணைக்கு பரிந்துரை செய்து கடந்த 6 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த உத்தரவில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் கூறியிருப்பதாவது:- சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை ரத்து செய்து மூத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு அளித்துள்ளார். அவ்வாறு ஏன் அவசரமாக உத்தரவு பிறப்பித்தேன் என்ற தனிப்பட்ட காரணத்தையும் மூத்த நீதிபதி விளக்கியுள்ளார்.
ஆனால், இளைய நீதிபதி பி.பி.பாலாஜி, அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் வழங்கி, அரசு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இது போன்ற நிலை இதற்கு முன்பு இந்திய நீதித்துறையில் நடந்தது இல்ல என்பதால்,
இது குறித்து தகுந்த அறிவுரையை பொறுப்பு தலைமை நீதிபதியிடம் இருந்து ஐகோர்ட்டு பதிவுத்துரை பெறவேண்டும். ஒருவரது அடிப்படை உரிமை, சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கவே, ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்க 2 நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்ச் உருவாக்கப்படுகிறது.

அந்த ஆட்கொணர்வு வழக்கை விசாரணைக்கு ஏற்கும் போது, அதிகாரிகள் தரப்பு விளக்கம் அளிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் பொது அமைதிக்கு எந்த வகையில் குந்தகத்தை ஏற்படுத்தினார் என்பதை விளக்கம் அளிக்க போலீசாருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அந்த வாய்ப்பு இந்த வழக்கில் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கரை சிறையில் அடைத்த போலீஸ் கமிஷனர் உத்தரவை மூத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்துள்ளார்.

ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு நியாயத்தை கேட்ட பின்னரே தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பது தான் சட்டக்கல்லூரியில் சொல்லிக் கொடுக்கப்படும் முதல் பாடமாகும். அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதால், இவ்வாறு தீர்ப்பு அளித்துள்ளதாக மூத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் காரணம் கூறியுள்ளார்.
நீதி பரிபாலனம் செய்யும் போது அரிதான சமயத்தில் இதுபோல நீதிபதிகளுக்கு இடையூறு ஏற்படும். அப்படி நடக்கும் போது, தன் நீதி பரிபாலனத்தில் தலையிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

ஆனால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியும் இல்லையென்றால், அந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். ஆனால், 2 பேர் தன்னை அணுகியதால், இதுபோல உத்தரவு பிறப்பித்துள்ளதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.
இது சரியானது அல்ல. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தடுப்புக்காவல் சட்டத்தின்படி போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரம் சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை, அதிகாரிகள் தரப்பு கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.