அஷ்டலட்சுமி மாநிலங்களின் தேவைகளை நிறைவேற்ற பிரதமர் மோடி 60 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளதாக ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 9 ஆண்டுகளில் 60 முறை வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ளார். இது அவருக்கு முன் இருந்த அனைத்துப் பிரதமர்களின் மொத்தப் பயணங்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கலாம். இதன் விளைவாக, வடகிழக்கு மாநிலங்களிலும் பிரதமர் மோடி அரசில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 9 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நம்பமுடியாத மாற்றங்களை எடுத்துரைக்கும் பூர்வோதயா மாநாட்டை கவுகாத்தியில் தொடங்கி வைத்து உரையாற்றும்போது மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மேற்குறிப்பிட்டவாறு கூறினார்.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், வடகிழக்கு மாநிலங்கள் கிளர்ச்சி, மோதல் போன்றவற்றுக்காகவே செய்திகளில் அறியப்பட்டதாகவும், இப்போது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்நிலைமை மாறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 60 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு வந்துள்ளதாகவும், அமைச்சர்கள் 400-க்கும் மேற்பட்ட முறை வந்துள்ளதாகவும், கொரோனா இல்லையென்றால் பிரதமர் 100 முறையாவது வந்திருப்பார் எனவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரிபுரா மற்றும் மேகாலயாவில் இருந்து ஆயுதப்படை சிறப்புப் பாதுகாப்புச் சட்டம் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, 8,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2014-22 காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 63% குறைந்து 3,195 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மிகவும் மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.