ஜார்க்கண்டில் தண்ணீர் குடிக்க கிணற்றில் குதித்த குரங்குகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், பலாமு மாவட்டம், பன்கி தாலுகாவில் உள்ள சொரத் என்ற கிராமத்தில் மிகப்பெரிய விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் குதித்து குரங்குகள் தண்ணீர் குடித்துள்ளன. அதில்,32 குரங்குகள் நீரில் மூழ்கி இறந்துள்ளது தெரியவந்துள்ளது.

கோட்ட வன அதிகாரி குமார் அஷிஷ், ‘‘வனபகுதியில் இருந்து வந்துள்ள குரங்குகள் கூட்டம் நீர் அருந்துவதற்காக கிணற்றில் குதித்துள்ளன. அதில், நீரில் மூழ்கி குரங்குகள் இறந்துள்ளன. 32 குரங்குகள் இறந்து கிடந்தன. அந்த கிணற்றில் போதுமான அளவு நீர் உள்ளது.
குரங்குகள் இறந்ததற்கான காரணம் குறித்து அறிய அவற்றின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதற்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் குரங்குகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும்.

ஜார்க்கண்டின் பல பகுதிகளில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் நீர்நிலைகளில் நீர் வற்றி வருகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கின்றன’’ என்றார்.
கடந்த வாரம் செயின்பூர் வனபகுதியில் தண்ணீரை தேடி அலைந்த 3 நரிகள் கிணற்றில் மூழ்கி இறந்தன. அதேபோல் ஹசாரிபாக், கிரிதி மாவட்டங்களில் ஏராளமான வவ்வால்கள் இறந்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.