உண்மையான திராவிட தலைவராக இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா: சசிகலா

2 Min Read
சசிகலா

ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா என்று அண்ணாமலைக்கு சசிகலா பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சாதி, மத பேதங்களை கடந்து அனைத்து தரப்பினராலும் மதித்து போற்றக்கூடிய ஒரு மாபெரும் தலைவியாக தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர்.

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் வழியில் ஒரு உண்மையான திராவிட தலைவராக தனது இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டியவர் ஜெயலலிதா. இந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர் என அனைத்து சமூகத்தினரும் சொந்தம் கொண்டாடிய ஒரே ஒப்பற்ற தலைவி ஜெயலலிதா என்பது நாடறிந்த உண்மை. சாதி, மத, பேதங்களை கடந்து ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்கைத்தரம் மேம்பட தன்னை அர்பணித்துக் கொண்ட மாபெரும் தலைவர் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் விடாமுயற்சியால் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றதிற்காக 69% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்து அதனை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து “சமூக நீதி காத்த வீராங்கனை” என்று போற்றப்பட்டவர். அம்மா உணவகம் தந்து எண்ணற்ற ஏழைகளின் பசியைப் போக்கியவர் ஜெயலலிதா.

சசிகலா

6 முறை தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் ஆட்சி செய்து ‘முதல்வர் என்ற பதவிக்கு பெருமை சேர்த்த தலைவராக விளங்கினார். “ஜெ ஜெயலலிதா என்னும் நான்” என்று இந்த தமிழ் மண்ணில் எப்போதெல்லாம் உச்சரிக்கப்பட்டதோ அந்த காலகட்டங்களில் எல்லாம் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது. இன்னும் சொல்லப்போனாள் தமிழர்கள் தங்களது உரிமைகளை பறிகொடுத்து விடாமல் வாழமுடிந்தது. மேலும் மகிழ்ச்சியோடும் பாதுகாப்போடும் தமிழக மக்களால் இருக்க முடிந்தது.

ஏழை எளியவர்களுக்கு அம்மாவாக அரசியல் எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஆளுமை தான் ஜெயலலிதா. அவருக்கு தெய்வ நம்பிக்கை இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதே சமயம் என்றைக்கும் மத நம்பிக்கை கிடையாது. தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வைத்து இருந்த பெருமை ஜெயலலிதாவை சேரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு மக்கள் தலைவரை எந்தவித குறுகிய வட்டத்திற்குள்ளும் யாராலும் அடைத்துவிட முடியாது என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply