டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தது.
அதில் முறைகேடுகள் பற்றி சிபிஐயும், சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அதில், சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.
அவர் தற்போது நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கோரியும், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரியும்,

கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்குகளை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை கடந்த ஏப்ரலில் தள்ளுபடி செய்தன. அதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அவர் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா அமர்வு விசாரித்தது.
கடந்த மே 10 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது மக்களவை தேர்தலையொட்டி கடந்த ஜூன் 1 ஆம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணாவும், திபங்கர் தத்தா ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:-

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வரை பதவியை ராஜினாமா செய்யுங்கள் அல்லது பதவியை விட்டு விலகுங்கள் என நீதிமன்றங்களால் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இது பற்றி அவர் தான் முடிவு எடுக்க வேண்டும்.
அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ள சட்டப்பிரிவுகள் குறித்து பல்வேறு முக்கிய கேள்விகளை கெஜ்ரிவால் தரப்பு முன் வைத்துள்ளது. அதில் முக்கியமாக, அவரை அமலாக்கத்துறை கைது செய்ததற்கான முகாந்திரம் என்ன? அதற்கான காரணம் வலுவாக உள்ளதா?
ஆதாரங்களின் அடிப்படை என்ன? என்பது உள்ளிட்ட மூன்று முக்கிய கேள்விகள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். எனவே, அது தொடர்பான விசாரணையை மட்டும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம். மேலும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில்,

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் உத்தரவிடுகிறோம். ஒரு நபரை கைது செய்தால் மட்டும் தான், வழக்கில் விசாரணை நடத்த முடியும் என்று கூறுவதை இந்த நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வராக கெஜ்ரிவால் இருக்கிறார்.
மேலும், அவர் 90 நாட்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இவருடைய கைது நடவடிக்கையின் போது சட்ட விதிகள் 19, 45 ஆகியவை பின்பற்றப்பட்டு இருப்பது கவலை அளிக்கிறது.

இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் மட்டும் தான், கெஜ்ரிவாலுக்கு தற்போது இடைக்கால ஜாமீன் கிடைத்துள்ளது.
ஆனால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயும் அவரை கைது செய்து இருப்பதால், அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்தால் மட்டுமே அவர் வெளியே வர முடியும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.