ஊர் பொதுமக்கள் கோவிலுக்குள், பட்டியலின மக்கள் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வது தொடர்பாக இரு வேறு வகுப்பைச் சேர்ந்த இளைஞர்கள் முகநூலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கிராமத்தில் அது கைகலப்பாக மாறிய சம்பவத்தால் பரபரப்பு…
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு…
திருவண்ணாமலை அடுத்த செல்லங்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் திருக்கோவில். 100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த மாரியம்மன் திருக்கோவிலில் ஊர் மக்கள் திருவிழாக்கள் பல்வேறு விசேஷ தினங்களில் சாமி வழிபாடு உள்ளிட்டவைகளை செய்து வருகின்றனர்.
அதேபோல அதே கிராமத்தில் ஆதி திராவிட வகுப்பு சார்ந்தவர்களுக்காக காளியம்மன் கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இதனடையே ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த தங்கராசு சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் ஊரின் கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு தங்கள் இன மக்களும் உள்ளே சென்று தரிசனம் செய்ய வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக முகநூல் பக்கத்திலும் தங்கராசு பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் வகுப்பைச் சேர்ந்த செந்தமிழும் சென்னையில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்கள் இருவருக்கும் முகநூல் பக்கங்களில் பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் ஒரு கட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு பார்த்துக் கொள்ளலாம் என முகநூலில் பதிவிட்டு இருந்த நிலையில் இன்று கிராமத்திற்கு வந்த தங்கராசு மற்றும் செந்தமிழ் ஆகிய 2 பேருக்கும் கிராமத்தின் மையப் பகுதியில் வாய் தகராறு ஆக ஆரம்பித்து கைகலப்பாகவும் மாறியது.
இதனை அறிந்த ஊர் மக்கள் அவர்கள் இருவரும் தகராறில் ஈடுபடாமல் இருப்பதற்காக தடுக்கும் சமயத்தில், இரு வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர்கைகலப்பாகவும் மாறி ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை அறிந்த வேட்டவலம் போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்லங்குப்பம் கிராமத்திற்கு வந்த பொழுது காவல் துறையினருடைய வாகனத்தை மரித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைத்தனர்.
தற்பொழுது செல்லங்குப்பம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவிலுக்குள் நுழைவது குறித்து இரு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் முகநூல் பக்கத்தில் வாக்குவாதம் செய்து வந்த நிலையில் தற்பொழுது ஒரே கிராமத்தில் இருவரும் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.