தஞ்சாவூர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தொடர்ந்து வழி மறித்து தாக்கி கொள்ளையடிக்கும் மர்ம கும்பல். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாதாகோட்டை அன்னை வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் சரக்கு வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செந்தில்குமாரும், அவரது மனைவி திலகவதியும் பாபநாசம் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நேற்றிரவு வீடு திரும்பியுள்ளனர்.

தஞ்சாவூர் புறவழிச்சாலை அருகே வெண்ணாற்று பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செந்தில்குமாரை தடுத்து நிறுத்தி உள்ளனர். சுதாரித்து கொண்ட அவர் நிற்காமல் இருசக்கர வாகனதை ஓட்டியுள்ளார். அப்போது மர்ம கும்பல் செந்தில்குமார் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர். இதில் கணவன் – மனைவி இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
அப்போது மர்ம கும்பல் , அவர்கள் இருவரையும் ஆயுதத்தால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் திலகவதியின் ஆறரை பவுன் தாலி செயினை அறுத்து கொண்டு அவர்களிடம் இருந்த பணத்தையும் கொள்ளையடித்து விட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த கணவன் – மனைவி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் புறவழிச் சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பே சென்ற காதல் ஜோடியை மிரட்டி அவர்களிடம் இருந்து ஜிபே மூலம் பணம் வழிப்பறி செய்த நான்கு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர் என்பது குறிப்பிட்டுத்தது.
தஞ்சாவூர் புறவழிச்சாலை -திருச்சி, நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளை இணைக்கும் பிரதான சாலை.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சாலையில் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் பெண்கள், கணவன் – மனைவி ஆகியோரை வழிமறித்து கொள்ளை அடிக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.