ஆறு வயது பட்டியலின சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், “மதுரை மாவட்டம் பெருங்குடியில், பட்டியல் சமூக மக்கள் ஐந்து பேரை ஆயுதத்தால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. ஆறு வயது சிறுவன் ஒருவரும் இந்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவது கண்கூடு. வாக்கு அரசியலுக்காக, குற்றவாளிகளுக்கு எதிராக எந்தக் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்காமல், தொடர்ந்து சமூகங்களுக்கிடையே விரோதத்தை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது திமுக அரசு.
இதனால் பாதிக்கப்படுவது அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சாதாரண பொதுமக்களே என்பதை முதலமைச்சர் உணர வேண்டும்.
பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான இது போன்ற குற்றச் சம்பவங்களை திமுக அரசு கண்டும் காணாதது போல் இருப்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனியும் இது போன்ற குற்றங்கள் நடக்காமல், கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்
Leave a Reply
You must be logged in to post a comment.