தமிழ்நாட்டை சேர்ந்த ஆதீனங்கள் தேவாரம் பாடி, தமிழ் மந்திரங்கள் ஓத, பிரதமர் மோடி செங்கோலை நிறுவி, புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்தார்.
டெல்லியில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடந்த 1921ம் ஆண்டு நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டது. 96 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால் புதிய நாடாளுமன்றம் கட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டினார். பழைய நாடாளுமன்றத்தின் அருகே, 4 மாடிகளுடன் முக்கோண வடிவில் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள், பிரமாண்ட அரங்குகள், கலை அம்சத்துடன் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டி முடிக்கப்பட்டது.

ரூ.1250 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடந்தது. விழாவில் பங்கேற்க ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்காமல், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்தன.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையே, நேற்று காலை 7.30 மணிக்கு தமிழ் முறைப்படிமந்திரங்கள், ஹோமம், பூஜைகளுடன் திறப்பு விழா தொடங்கியது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் பாரம்பரிய உடையில், நெற்றியில் சந்தன பட்டையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வந்த பிரதமர் மோடி, நுழைவாயில் முன்பாக காந்தி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கர்நாடகாவின் சிருங்கேரி மடத்தை சேர்ந்த வேத விற்பன்னர்களுடன் இணைந்து கணபதி ஹோமத்தில் பங்கேற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.