அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா

2 Min Read
போஸ்டர்

விஜய் அரசியல் பிரவேசம் இப்போது எல்லோர் அளவிலும் பேசு பொருளாகி விட்டது.அதற்கு எடுத்துக்காட்டாக,மதுரையில் விஜய் ரசிகர்களால் ஒட்டப்பட்ட போஸ்டர் இணையத்தில் பயங்கரமாக பரவிய நிலையில், போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விஜய் மக்கள் இயக்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

- Advertisement -
Ad imageAd image
விஜய்

நடிகர் விஜய், அரசியல் பிரவேசத்திற்கு தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார் விஜய். இதனால், எந்த சமயத்திலும் விஜய் களத்தில் இறங்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு விஜய் முதலமைச்சர் ஆவது போல் கனவு கண்டு மதுரையில் விஜய் ரசிகர்கள் சிலர் போஸ்டர் அடித்திருந்தனர்.

தினத்தந்தி செய்தித்தாள் வடிவில் அச்சடிக்கப்பட்டு ஒட்டப்பட்ட அந்த போஸ்டரில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. மத்தியில் மோடியின் நல்லாட்சி, மாநிலத்தில் விஜய்யின் மக்களாட்சி என்று மக்கள் பேச்சு. தொலைபேசியில் பாரதப் பிரதமர் விஜய்க்கு வாழ்த்து, பதவி ஏற்பு விழாவிற்கு மோடி தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்தது என்று பொதுமக்கள் பேட்டி என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

போஸ்டர்

கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் விஜய். தமிழக முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தொண்டர்கள் கொண்டாட்டம் என்றும் அந்த போஸ்டரில் அச்சடிக்கப்பட்டிருந்தது. மேலும், கூட்டணி கட்சி தலைவர்கள் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிப்பது போன்ற படமும் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில் நடிகர் விஜய்க்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜான்பாண்டியன், டிடிவி தினகரன், ஜிகே வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தவறான தகவல் பரப்பி விஜய் நற்பெயரை கெடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். அந்த போஸ்டரில் இருக்கும் நபர் விஜய் மக்கள் இயக்கத்தில் ஒரு பதவியில் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தில் அப்படி ஒரு பதவியே இல்லை என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விஜய்யை அரசியல் கட்சி தலைவர்களுடன் இணைத்து, நாளிதழில் வெளியான செய்தியை போல் போஸ்டர் வடிவமைத்து ஒட்டிய விவகாரத்தில் காவல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட பத்ரி சரவணன் என்பவர் நடிகர் விஜய்க்கு களங்கம் ஏற்படுத்தி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

எது எப்படியோ விஜய் தமிழக அரசியலில் இப்போது பேசு பொருளாகி விட்டார்.

 

Share This Article

Leave a Reply