கேரள சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் விஷ்ணுநாத் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கேரளாவில் போலீசாருக்கு மன அழுத்தமும், வேலைப்பளுவும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த 5 வருடங்களில் 88 போலீசார் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 6 நாளில் மட்டும் 5 போலீசார் தற்கொலை செய்துள்ளனர்.

போலீஸ் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே போலீசார் பணியில் உள்ளனர். இந்த நிலையில் 118 போலீசார் பணியில் இருக்க வேண்டிய ஒரு போலீஸ் நிலையத்தில் 44 பேர் மட்டுமே உள்ளனர். பெண் போலீசாருக்கு ஓய்வு அறைகள் கிடையாது.

பல போலீஸ் நிலையங்கள் மிகச்சிறிய கட்டிடங்களில் தான் செயல்பட்டு வருகின்றன. எனவே போலீசாரின் பிரச்சனைகள் குறித்து சபையை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:- பெருமளவு தொழில் நுட்பத்தை புகுத்தி போலீசாரின் வேலைப்பளுவை குறைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. போலீஸ் துறையில் ஏதாவது பிரச்சனைகள் உள்ளதா என்பது குறித்து கண்டிப்பாக ஆய்வு நடத்தப்படும்.
குறிப்பாக 8 மணி நேர வேலை என்பதை போலீஸ் துறையில் அமல்படுத்துவது மிகவும் சிரமமாகும். போலீசாருக்கு மன அழுத்தத்தை குறைப்பதற்காக யோகாசன வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.