சென்னையில்,தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும், தங்களையும் சகமனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தன்பாலின ஈர்ப்பாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் LGBT என்று அழைக்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

ஓரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கைகள் உள்ளிட்டோர் ‘வானவில் கூட்டணி’ என்ற பெயரில் அமைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் தங்களுடைய உரிமைகளை வலியுறுத்தி சென்னையில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘வானவில் சுயமரியாதை’ என்ற தலைப்பில் பேரணி நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பேரணி சென்னையில் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தொடங்கிய இந்தப் பேரணி சிந்தாதிரிப்பேட்டை லேங்க்ஸ் தோட்ட சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.
சென்னை மட்டுமின்றி, பிற மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்கள் பலரும் பேரணியில் பங்கேற்றனர். குறிப்பாக இந்த ஆண்டு இளம்பெண்கள் அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமான திருநங்கைகளும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
மேளதாளம் முழங்க, ஆடிப்பாடி அனைவரும் உற்சாகத்தில் திளைத்தனர். ‘எங்கள் பாலினம் எங்கள் உரிமை’, ‘எனது உடல் எனது உரிமை’ போன்ற முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

தன்பாலின ஈர்ப்புக்கு ஆதரவாக வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பலர் கையில் ஏந்தி இருந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸாரும் உடன் சென்றனர். பேரணியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
’’தன்பாலின மக்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசின் மாற்று பாலினத்தோர் உரிமை மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்’’ என பேரணியில் கலந்துக் கொண்டவர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.