மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்து, இந்தியா முழுவதும் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டது.
திமுக கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில் போட்டியிட்ட மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ அமோக வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அதை தொடர்ந்து, துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது;- மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை இந்த தேர்தல் காட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் கொஞ்சம் நியாயமாக நடந்திருந்தால் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருந்திருக்கும்.

நடுநிலைமையோடு செயல்பட்டிருந்தால் இன்னும் கூடுதலாக 100 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இருக்கும். ஒரு பொய்யான கருத்துக்கணிப்பை பாஜக ஒட்டுமொத்தமாக பரப்பியது. எங்களை பொறுத்தவரை பாஜகவுக்கு அறுதிப்பெரும்பான்மை கிடையாது.

கூட்டணி அமைத்து தான் ஆட்சியை அவர்கள் அமைக்க முடியும். அப்படி இருக்கும் போது இனிமேல் பாஜக சர்வாதிகாரமாக செயல்பட முடியாது. மக்களுக்கு எதிரான சட்டங்களை அவர்கள் இனி கொண்டு வர முடியாது. இது ஒரு நல்ல வரவேற்பு. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.