- புழல் சிறையில் கைதிகளை சந்திக்க புதிய நடைமுறைகளை அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை சந்திப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்; ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படும்; சிறையில் கைதிகளுடன் இண்டர்காம் மூலம் மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து வழக்கறிஞர் ஆனந்த் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் , ஏ.டி. மரியா க்ளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், புதிய நடைமுறைகள் காரணமாக, விசாரணை கைதிகளை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், கைதிகளை தங்களது குறைகளை தெரிவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், கைதிகளை சந்திக்கும் நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இண்டர்காம் மூலம் பேசினால் அது பதிவு செய்யப்படும் என்ற அச்சம் கைதிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், நேரடியாக பேசும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் தெரிவித்தனர். புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி, கடந்த ஆண்டு நிர்வாக ரீதியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டதா? என அரசுத்தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து , வழக்கின் விசாரணையை அக்டோபர் 1 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.