தனிக்கட்சி தொடங்க மாட்டேன் அதிமுகவை மீட்பதே இலக்கு என்று கோவையில் நடந்த கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் ஜனவரி 24 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். இதன்படி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் கோவை சூலூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஓ. பன்னீர்செல்வம் வருகை தந்தார். அவருக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசியதாவது; கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதனை அடுத்து 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் இருந்த நான் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்து இருந்தால் ஆட்சி போய் இருக்கும்.

அப்போது அவர்கள் மன்றாடி கேட்டுக் கொண்டதால் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தேன். இதனால் ஆட்சி காப்பாற்றப்பட்டது. சசிகலா உங்களுக்கு பதவியை கொடுத்தார். ஆனால் நீங்கள் எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவே எப்படியெல்லாம் பேசினீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது. ஈரோடு இடைத்தேர்தலில் தனியாக நின்றால் ஓட்டுகள் பிரியும் என்பதால் வாபஸ் வாங்கும் படி பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதனால் வாபஸ் வாங்கினேன். ஆனால் அதிமுக தோற்றது. அனைத்து தேர்தல்களிலும் நீங்கள் தோற்றதால் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்று தானே அர்த்தம். அதிமுக சின்னம் உங்களுக்கு தற்காலிகமாக தரப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த தொண்டர்களுக்காக வாதாடி கொண்டு இருக்கிறோம். இந்த பக்கம் தொண்டர்கள் உள்ளனர். அந்தப் பக்கம் குண்டர்கள் உள்ளனர். நான் தனி கட்சி தொடங்க மாட்டேன். அதிமுகவை மீட்டு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவிடம் ஒப்படைப்பது தான் நன்றியாக இருக்கும். அதுதான் எனது இலக்கு. ஆட்சியில் இருந்த போது கோப்புகள் என்னிடம் வந்து தான் செல்லும். அதில் பல தவறுகள் இருக்கிறது. அந்த ரகசியங்களை நான் அவிழ்த்து விட்டால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறைக்கு தான் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.