தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பனனை இன்று சந்தித்தார்.
இது தொடர்பாக முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்,”தமிழ்ப் போற்றும் சிங்கை வாழ் தமிழறிஞர் பேராசிரியர் சுப.திண்ணப்பன் அவர்களை இன்று சந்தித்தேன். என்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் – முதல் பாகம்’ நூலினை வழங்கி, அவரை வரவேற்றுப் போற்றினேன்.

தமிழும் தமிழர் நலமும் காக்கும் நமது அரசின் பணிகளைப் பாராட்டினார். தமிழ்ப் பண்பாட்டை உலகுக்குக் காட்சிப்படுத்தும் கீழடி அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், பொருநை அருங்காட்சியகமும் சிறப்புற அமைந்திட வாழ்த்தினார்.
சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில் சிலவற்றை நமது அரசு ஏற்கனவே செயல்படுத்தி வருவதைத் தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என உறுதியளித்தேன். முத்தமிழறிஞர் கலைஞரின் மகனான நான் சொன்னதை நிச்சயம் நிறைவேற்றுவேன் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அதே நம்பிக்கையைத்தான் நீங்களும் என் மீது கொண்டிருக்கிறீர்கள். அதனைக் காக்கும் என் பணிதான் தமிழுக்கும் தமிழர்க்கும் தொண்டாற்றுவது என்று நெஞ்சுக்குள் நினைந்து மகிழ்ந்தேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.