எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது – சீமான்

2 Min Read
சீமான்

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குல்குவாரிகளால் 700 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி வந்துள்ள நிலையில், இன்னும் எத்தனை நாளுக்கு திமுக அரசு இந்த வள வேட்டையை தொடரப்போகிறது என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டத்தின் கல் குவாரிகளில் தமிழ்நாடு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் ஊழலை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்துள்ளது அறப்போர் இயக்கம். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த வள வேட்டையைத் தொடரப்போகிறது திமுக அரசு? திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் கல் குவாரிகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டப் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனராக இருந்த திரு நிர்மல்ராஜ் IAS, முறைகேடாக இயங்கிய (54 குவாரிகளில் 53 குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவை விட 281 சதவீதம் அதிகமாக, சட்ட விரோதமாக செயல்பட்டிருக்கிறது) குவாரிகளைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அவர்களையும் இடமாற்றம் செய்திருப்பது அப்பட்டமாக ஆளும் அரசின் எதேச்சதிகர போக்கினையும், வளக்கொள்ளையற்களை ஆதரிக்கும் நடவடிக்கையையும் காட்டுகிறது.

சீமான்

புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராகப் பின்னர் நியமிக்கப்பட்ட ஜெயகாந்தன் அவர்கள், 24 குவாரிகளுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட 262 கோடியை, 14 கோடியாகக் குறைத்ததும், திமுகவை சேர்ந்த திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் ஜுலை 22, 2022 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை மறைமுகமாகத் தாக்கி பேசியதும், மேலும் திமுக வை சேர்ந்தவர்கள் வளக்கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கொலை மிரட்டல் விடுப்பதும், வளக்கொள்ளையர்களைப் பாதுகாக்க அரசு ஏற்படுத்தக்கூடிய வலைப்பின்னைலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இடமாற்றம் செய்யப்பட்ட ஆட்சியர்களை மீண்டும் அவர்களின் முந்தையப் பணியிடத்தில் அமர்த்துவதோடு, அவர்கள் முன்னர் வெளியிட்ட ஆணைகளை முழுமையாகக் கடைபிடிக்கவும், இந்த ஊழலில் பெரும் பங்கு வகித்து சட்ட விரோதமாக செயல்பட்ட திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மீதும் அவர் மகன் தினகரன், அவரது நண்பர் இசக்கியப்பன், திமுக-வின் நெல்லைக் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் ஆகியோர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடு முழுவதும் இதனையொட்டிய ஆய்வுகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது. இதனைத் தமிழ்நாடு அரசு செய்ய மறுத்தால் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் விழப்புணர்வுப் பரப்புரை மற்றும் தொடர் போராட்டங்களை இன்னும் வீரயமாக என் தலைமையில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article

Leave a Reply