தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை;- ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் உச்சநீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை சாக்காக வைத்து மண்டல வாரியான தேர்வு முறையை ஒழித்து கட்டியுள்ளது.
அதன் விளைவாக தேர்வுகள் அனைத்தும் டெல்லியில் நடத்துகிற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக 90 சதவிகிதத்திற்கும் மேலாக இந்தி பேசும் மாநிலங்களிலிருந்தே பணி நியமனங்கள் நடைபெறுகிறது.

தென்மாநிலங்களில் இருந்து பெயரளவுக்கு 5 அல்லது 10 சதவிகிதத்தினர் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். ஒன்றிய பாஜக அரசின் இத்தகைய தவறான அணுகுமுறையின் காரணமாக, பணியாளர் தேர்வாணையத்தினால் ஒன்றிய அரசின் அலுவலகங்களின் தன்மையே முற்றிலும் மாறியிருக்கிறது.
உதாரணமாக மாநில கணக்காயர் கட்டுப்பாட்டில் மண்டல கணக்காயர் என்று ஒரு பிரிவு உண்டு. அவர்கள் மாநில அரசின் பொதுத்துறை பிரிவுகளில் அமர்த்தப்படுவார்கள்.

அவர்கள் ஒவ்வொரு கணக்கையும் ஆய்வு செய்து கையெழுத்திட்டால் தான் அது ஏற்கப்படும். இந்த பதவிகளில் சரிபாதிக்கு மேல் இந்தி பேசும் மாநில ஊழியர்கள் தான் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பணியாற்றும் இந்தி பேசும் பணியாளர்கள் தமிழே தெரியாமல் எப்படி கணக்கு தணிக்கையை ஆய்வு செய்ய முடியும்?.
சமீபத்தில், பணியாளர் தேர்வாணையத்தில் ஜூன் 2024 முதல் ஜூலைக்குள் 41,233 காலி பணியிடங்களுக்கு இணையதளத்தின் மூலம் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தோடு பிற மாநில மொழிகளில் ஒன்றான தமிழிலும் நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இதை ஏற்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.