வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படி புரியும் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், காவிரி நீரில், கடந்த ஆண்டு கிடைக்கப் பெற்ற தண்ணீரின் அளவு 81.4 டிஎம்சி மட்டுமே. ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டிய தமிழகம், அதில் பாதி அளவைக் கூட பெறவில்லை என்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. திமுக காங்கிரஸ் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, தமிழக விவசாயிகளின் நலனை மொத்தமாக அடகு வைத்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
காவிரியில் குறித்த அளவு நீர்வரத்து இல்லாததால், இந்த ஆண்டு ஜூன் 12 அன்று, விவசாயத்திற்காகத் திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை திறக்கப்படாமல், பாசனத்துக்கு நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இது குறித்த எந்தக் கவலையும் இல்லை. தன்னை ஒரு டெல்டாக்காரன் என்று கூறிவிட்டு, வயலில் கான்கிரீட் சாலை அமைத்து நடக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, விவசாயிகள் வேதனை எப்படிப் புரியும்?
முதலமைச்சர் ஸ்டாலின், தனது கூட்டணி நலனுக்காக, தமிழக விவசாயிகள் நலனைப் புறக்கணிப்பதை நிறுத்திக் கொண்டு, உடனடியாக, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் பெற்றுத் தரும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.