ஓசூரில் மகனை கொலை செய்தவரை கூலிப்படையை ஏவி பழி தீர்த்த தந்தை உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திலக் (24) இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஸ்ரீராம் சேனா ஓசூர் நகர செயலாளர் மோகன் பாபு (25) என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த திலக் கடந்த வெள்ளிக்கிழமை 12ஆம் தேதி பட்டப்பகலில் ஒசூரில் பெரியார் நகர் பகுதியில் ரிங் ரோட்டில் உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்தபோது இரண்டு பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை சம்பவம் குறித்து ஓசூர் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஸ்ரீராம் சேனா நகர செயலாளர் மோகன் பாபு கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அவரது தந்தை திம்மராயப்பா (54) என்பவர் மத்திகிரி பகுதியை சேர்ந்த ரவுடி சசிகுமார் (24) என்பவர் மூலம் திலக்கை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தன்னை தேடுவதை அறிந்த திம்மராயப்பா ஓசூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசமூர்த்தி முன்பு சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (23) மற்றும் தின்னூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகியோருக்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் ஒசூர் நகர போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் முக்கிய நபரான ரவுடி சசிகுமார் சங்ககிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் சொப்பட்டி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பாவின் மகன் மோகன் பாபு சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லும் நேரத்தில், திலக் மற்றும் அவரது நண்பர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். தனது ஒரே மகனை இழந்த திம்மராயப்பா திலக்கை கொலை செய்ய முடிவு செய்து ஒரு சிலரிடம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் திலக்கை கொலை செய்யாமல் இருந்துள்ளனர். இந்த நிலையில் தனது தம்பி மகனான சிவகுமார் மூலம் தின்னூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷை சந்தித்த திம்மராயப்பா, அவர் மூலம் மத்திகிரியை சேர்ந்த ரவுடி சசிகுமாரிடம் சென்று திலக்கை கொலை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார்.
திலக்கை கொலை செய்ய சசிகுமார் 20 லட்சம் ரூபாய் வேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து திம்மராயப்பா தங்க நகைகளை அடகு வைத்து முதற்கட்டமாக 2 லட்சம் ரூபாயை சசிகுமாருக்கு அட்வான்ஸாக கொடுத்துள்ளார். கடந்த 12ஆம் தேதி ஓசூர் பெரியார் நகர் ரிங் ரோடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் திலக் டீ குடித்து கொண்டிருப்பதை பார்த்த திம்மராயப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் ரவுடி சசிகுமாருக்கு போன் மூலம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற சசிகுமாரும் அவரது நண்பரும் சேர்ந்து திலக்கை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த கொலையில் சசிகுமாரோடு வந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.