கர்நாடகாவில் கனமழை – காவிரியில் தண்ணீர் திறப்பு..!

4 Min Read

காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்க மறுத்த நிலையில், இயற்கை அன்னையின் கருணையால் கர்நாடகாவில் கடும் மழை பெய்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

இதனால், கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளதால், பாதுகாப்பு கருதி 55 ஆயிரத்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 நாளில் 4 அடி வரை உயர்ந்துள்ளதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணையின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன.

காவிரியில் தண்ணீர் திறப்பு

ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால், நடப்பாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பும், தண்ணீர் வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், குறித்த நாளில் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின்மையால், அணைக்கான நீர்வரத்து வெகுவாக சரிந்தது.

இந்த நிலையில், டெல்டா விவசாயிகளின் நலனை கருதி, காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திற்கு சேரவேண்டிய தண்ணீரை திறக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கர்நாடக அரசு

ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என அம்மாநில முதல்வர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். இதனை அடுத்து, காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவை நிறைவேற்றும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

அதன் பின்னரும் கர்நாடக அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநிலம் குடகு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. கர்நாடக மாநிலம் குடகு, மைசூர், மாண்டியா, ஷிவமோக்கா, ஹாசன்,

உத்தரகன்னடா, சிக்கமங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 14 ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்தது. இதனால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தமிழ்நாடு

கபினி அணை தனது முழு கொள்ளளவான 84 அடியில் 83.43 அடி வரை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவான 124.80 அடியில், தற்போது 106 அடியை எட்டியுள்ளது. இதனால் அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி,

இரு அணைகளில் இருந்தும் மொத்தம் 50,500 கனஅடி உபரிநீர், காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீரானது, நேற்று மாலை, தமிழக எல்லைக்கு வர தொடங்கியுள்ளது. விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து,

நேற்று காலை 11 மணி நிலவரப்படி, படிப்படியாக விநாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, பரிசல் இயக்குவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரித்ததன் காரணமாக, அருவிகள் மற்றும் காவிரி கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 5,054 கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் விநாடிக்கு 16,577 கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 20,910 கனஅடியாக அதிகரித்தது.

தமிழக எல்லை பகுதி

aதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் 43.83 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 46.80 அடியானது. ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 2.97 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 15.85 டிஎம்சியாக உள்ளது. காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, 2வது நாளாக அடிப்பாலாறு, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி பரிசல் துறைகளில் விசைப்படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் திறப்பு

நீரின் இழுவை விசை அதிகமாக இருப்பதால், 2வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. காவிரி கரைகளில் விட்டு விட்டு மழை பெய்வதால், மீனவர்கள் தங்கள் முகாம்களில் முடங்கி கிடக்கின்றனர். தமிழக அரசின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் கர்நாடக அரசு அலட்சியம் காட்டி வந்த நிலையில்,

இயற்கையின் கருணையால் பெய்து வரும் கனமழை காரணமாக, வேறு வழியின்றி காவிரியில் தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share This Article

Leave a Reply