காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி, கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

2 Min Read

காவிரி பாசன மாவட்டங்களில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் தாராளமாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், கடலுர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், அடியுரமாக இடுவதற்கான டி.ஏ.பி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட், பொட்டாஷ் ஆகிய உரங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தனியார் உரக்கடைகள் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களிலும் டி.ஏ.பி, மற்றும் பொட்டாஷ் உரங்கள் கிடைக்கவில்லை. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா நடவு பாதிக்கப்பட்டிருக்கிறது.

பொட்டாஷ் உரங்கள்

மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையை மட்டுமே நம்பி சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்ய பெருமளவிலான உழவர்கள் முன்வரவில்லை. நிலத்தடி நீரை பயன்படுத்தும் வசதி கொண்ட உழவர்கள் மட்டும் தான் சம்பா மற்றும் தாளடி சாகுபடிக்கு தயாராகியுள்ளனர்.

அதனால் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்களின் தேவை குறைந்திருக்கும் போதிலும், அதைக் கூட தடையின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பா மற்றும் தாளடி பருவத்திற்காக வினியோகிக்கப்படும் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் இதுவரை விற்பனைக்காக சந்தைக்கு வராதது தான் இத்தகைய தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

காவிரி படுகை மாவட்டங்களில் காம்ப்ளக்ஸ் எனப்படும் கூட்டு உரங்கள் விற்பனைக்காக வந்துள்ளன. டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடியுரமாக பயன்படுத்தலாம் என்று உழவுத்துறை அதிகாரிகள் உழவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால், டி.ஏ.பி. உரத்தின் சத்துகள் பயிர்களுக்கு உடனடியாக கிடைக்கும்; காம்ப்ளக்ஸ் கூட்டு உரங்களின் சத்துகள் பயிர்களுக்கு கிடைக்க நீண்ட காலம் ஆகும் என்பதால், அந்த ஆலோசனையை ஏற்பதற்கு உழவர்கள் தயாராக இல்லை. டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்களை தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்வது மட்டும் தான் இந்த சிக்கலுக்கு தீர்வு ஆகும்.

ராமதாஸ்

நடப்பாண்டில் மட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சம்பா மற்றும் தாளடி நடவு தொடங்குவதற்கு முன்பாக டி.ஏ.பி மற்றும் பொட்டாஷ் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. பொட்டாஷ் உரங்கள் முழுமையாகவும், டி.ஏ.பி. உரங்கள் பெரும்பான்மையாகவும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சம்பா மற்றும் தாளடி பருவம் தொடங்கும் காலம் வேளாண் துறைக்கு முன்கூட்டியே தெரியும் என்பதால், மத்திய அரசிடம் பேசி சரியான நேரத்தில் டி.ஏ.பி, பொட்டாஷ் உரங்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply