ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு இப்போது வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவது குறித்து வேதனையடைந்தேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகலில் திடீரென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மர்மநபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றார். அவரை அங்கிருந்த போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்த 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அமைதி பூங்காவாக இருந்த தமிழ்நாடு இப்போது வெடிகுண்டு கலாசாரம் பரவி வருவது குறித்து வேதனையடைந்தேன்.

ஆட்டை கடித்து , மாட்டை கடித்து,ஆளையே கடித்த கதையாக, தற்போது ஆளுநர் மாளிகையிலேயே வெடிகுண்டு வீசிய செயல், வண்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு எத்தகைய நிலையில் உள்ளது என்பதற்கு, இந்த சம்பவம் மிகச்சிறந்த உதாரணம்.
தமிழக அரசு உடனடியாக சட்ட ஒழுங்கில் கவனம் செலுத்தி, வெடிகுண்டு கலாசாரம் பரவுவதை தடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு துணை போகாமல், கடுமையான தண்டனை வழங்கினால்தான், இது போன்ற குற்றங்கள் பரவாமல் தடுக்க முடியும்.

கவர்னர் மாளிகையிலேயே, வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெறுவதை பார்க்கும்போது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.