ஆளுநராக ரவி வந்தது முதல் தி.மு.க. ஆட்சியின்மீது அவதூறுக் குப்பைகளை வீசுகிறார் : கீ.வீரமணி காட்டம் !

2 Min Read
கீ.வீரமணி

ஆளுநராக ரவி வந்தது முதல் தி.மு.க. ஆட்சியின்மீது அவதூறுக் குப்பைகளை வீசுகிறார் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில்,”தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றாது, அவரது பணியை அதனடிப்படையில் செய்யாமல், மாநில அரசிற்கு எதிரான குற்றச்சாற்றுகளை பகிரங்கப் பேட்டி என்ற பெயரால் கூறுவதன்மூலம் தம்மை ஒரு சார்பானவர் – அரசியல் காழ்ப்புணர்வுடன் ‘திராவிட மாடல்’ ஆட்சிமீது நாளும் வெறுப்பையும், எதிர்ப்பையும் திட்டமிட்டே பதிவு செய்து வருகிறார் என்பது நாளோரு மேனியும், பொழுதொரு வண்ணமும் புலனாகிறது!

அவர் ஆங்கில நாளேடான ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’விற்கு அளித்துள்ள ஒரு பக்க விரிவான பேட்டியில், உண்மைக்கு மாறான பல தகவல்களைக் கூறியுள்ளார் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு இதோ: அவர் சிதம்பரம் தீட்சிதர்களிடையே நிலவும் குழந்தை மணக் குற்றங்களை மறைத்து, அவர்களுக்காகக் கசிந்துருகிக் கண்ணீர் விடுகிறார்! குழந்தைத் திருமணம் என்பது சமூக விரோத செயல் இல்லையா?

தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும்படி கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது என்பதை விளக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். குழந்தைத் திருமணம் (Child Marriage) என்பது எவ்வளவு பெரிய சமூக விரோத – சட்ட விரோதச் செயல் என்பதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல், தில்லை தீட்சிதர்களின் குற்றங்களை மறைத்து, எதுவுமே நடக்காததுபோல்,  அபாண்டமாக அவர்கள்மீது வீண்பழி போட்டதுபோல கூறுகிறார்!

கீ.வீரமணி 

அவரது பேட்டியின் ஒரு பகுதியில், ‘‘இந்த (மாநில) அரசாங்கமானது, கோவில்களை வெகுசிறப்பாக நிர்வகிப்பதாக நான் (ஆளுநர்) பாராட்ட வேண்டுமென விரும்புகிறது; ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 3000 ஏக்கருக்கும் அதிகமான கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது நல்லதுதான். ஆனால், 30,000 ஏக்கருக்கு மேலான கோவில் நிலங்கள் மீட்கப்படவேண்டிய நிலையில் உள்ளன. மீட்கப்பட்ட நிலப்பரப்பு, மிகக் குறைவு.

2020 ஆம் ஆண்டில் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?
2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வராது. அரசின் சமூகநலத்துறையின் அதிகாரிகள், பழிவாங்கிடும் நோக்கத்தில், கோவில் பொது தீட்சிதர்களின் குடும்பங்களில் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றதாக எட்டுப் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். வயதுக்கு வராத குழந்தைகளுக்குத் திருமணம் செய்வதாகக் குற்றச்சாட்டு. ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட குழந்தைத் திருமணங்கள் நடைபெறவில்லை. குழந்தைத் திருமணம் செய்வித்ததாகப் பெற்றோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ‘இரண்டு விரல் பரிசோதனையான’ கன்னித்தன்மை குறித்து பரிசோதிக்கப்பட்டு உள்ளனர். அந்தப் பெண் பிள்ளைகளில் சிலர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன்.

இப்படிப்பட்ட நிகழ்வுகள் பின்னணியாக உள்ள நிலையில், நான் இந்த அரசாங்கத்தைப் பாராட்ட வேண்டுமோ? இது அளவுக்கு அதிகமாக இல்லையா?’’ என்று ஆளுநர் பேட்டி கொடுத்துள்ளார்.
இதுபற்றி நாம் திரட்டிய தகவல்களைத் தருகிறோம். வாசகர்கள் பார்வைக்கும், உரிய முடிவுக்கும் வருவார்களாக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply