அடி மேல் அடி : பொன்முடி மகன் கௌதம சிகாமணி எம்.பி மீதான வழக்கு – சி.பி.ஐ கோர்ட்டு விசாரணை..!

2 Min Read

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கௌதம சிகாமணி உள்ளிட்டோர் மீது ஜனவரி 4 ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சி.பி.ஐ கோர்ட்டு அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

கடந்த 2011 – 2016 ஆம் ஆண்டுகளில் பொன்முடி தமிழக அரசின் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக பதவி வகித்த போது விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் கோரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியை 38 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, பொன்முடி அவரது மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கௌதம சிகாமணி உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது 2012 ஆம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். சென்னை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து பொன்முடியும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

கௌதம சிகாமணி எம்.பி

செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்களும் 13 லட்சம் மதிப்பிலான பிரிட்டன் பவுண்டுகள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக கௌதம சிகாமணி கே.எஸ் ராஜமகேந்திரன், ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாத் ஆகிய ஐந்து பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சென்னை சி.பி.ஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது கௌதம சிகாமணி எம்.பி உள்ளிட்ட ஐந்து பேரும் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

சி.பி.ஐ கோர்ட்டு விசாரணை

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி மலர்வாலண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம சிகாமணி உள்ளிட்ட இரண்டு பேர் ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர். இதன் பின்பு வழக்கு விசாரணையை ஜனவரி 4 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்தார். குற்றச்சாட்டு பதிவுக்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும். எனவே ஜனவரி 4 ஆம் தேதி கௌதம சிகாமணி உள்ளிட்ட ஐந்து பேரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

Leave a Reply