காடியார் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் உயிரிழந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அதிரடியாக கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள காடியார் கிராமத்தில் நேற்று மாலை விவசாய நிலத்தில் காடியார் கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். அவரது மனைவி அன்னபூரணி. இவர்களது மூத்த மகன் சந்தோஷ் ஆகியோர் அவர்களது விவசாய நிலத்தில் சடலமாக கிடப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருக்கோவிலூர் துணைக்காவல் கண்காணிப்பாளர் மனோஜ்குமார் தலைமையில், போலீசார் விரைந்து சென்று மூவரது உடலையும் மீட்டு, விசாரணையை தீவிரபடுத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மூவரின் உடல்களிலும் மின்சாரம் பாய்ந்ததற்கான தீக்காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து, இறந்த மூவரின் விவசாய நிலம் அருகே மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் தேடி உள்ளனர். ராமமூர்த்தி அவரது மனைவி நாவாம்பால் அவர்களது மகன் தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் தனிப்படை அமைத்து மூன்று பேரையும் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். அப்போது காடியார் கிராமத்தில் உள்ள ஆகாசமேடு அய்யனார் கோவிலில் மூவரும் தலைமறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து டி.எஸ்.பி மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மூவரையும் சந்தேகத்தின் பேரில் பிடித்து வந்து திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், முதலில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் தங்களது பாணியில் விசாரணை மேற்கொண்ட போது மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளதால் பன்றிகள் அதனை அடிக்கடி நாசம் செய்வதால் சட்டத்திற்கு புறம்பாக, மக்காச்சோளம் பயிரிட்டு இருந்த ராமமூர்த்தி தனது விவசாய நிலம் முழுவதும் மின்வெளி அமைத்துள்ளார். இதனை அறியாமல் ராதாகிருஷ்ணன், அன்னபூரணி மற்றும் அவர்களது மகன் சந்தோஷ் ஆகிய மூன்று பேரும் தங்களது விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்வதற்காக சனிக்கிழமை மாலை சென்றுள்ளனர். இந்த நிலையில், ராமமூர்த்தி வைத்திருந்த மின்வெளியில் சிக்கி மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இதனை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது விவசாய நிலத்திற்கு சென்ற ராமமூர்த்தி மூவரும் மின்வெளியில் சிக்கி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக மின்வெளியினை துண்டிப்புச் செய்து மின்கம்பிகளையும், கட்டைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளார். பின்னர், செய்வதறியாது திகைத்த ராமமூர்த்தி தனது மனைவி மற்றும் மகன் ஆகியோரிடம் நடந்ததை கூறிவிட்டு, சென்னைக்கு புறப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலிகளையும் பறிமுதல் செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் உயிரிழந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் மூன்று பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.