தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றே கடைசி நாள் என்பதால் இ – சேவை மையங்களில் குவிந்த விவசாயிகள். தொடர் விடுமுறையால் சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், சர்வர் பிரச்சினை போன்ற காரணங்களால் பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு. எனவே கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பாண்டு சம்பா பருவத்திற்கு தண்ணீர் பிரச்சனை, காவிரி நீர் வரத்து இல்லாததால், சாகுபடிப் பணிகள் பின் தங்கியுள்ளது. விவசாய ஆழ்துளை கிணற்றை மட்டுமே நம்பி விவசாயிகள் சாகுபடியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடைகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்கோ டோக்யோ பொது காப்பீட்டு நிறுவனம் மற்றும் ப்யூச்சர் ஜெனரலி காப்பீட்டு நிறுவனம் என இரண்டு காப்பிட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்து வருகிறது. பயிர் காப்பீட்டுத் தொகையாக ஏக்கருக்கு ரூபாய் 36 ஆயிரத்து 100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு விவசாயிகள் பிரிமியமாக (1.5 சதவீதம்) ரூபாய் 542 செலுத்த வேண்டும். இந்த நிலையில் சம்பா பருவத்தில் காவிரி நீர் வரத்து இல்லாததால், பெரும்பாலான விவசாயிகள் விவசாய சாகுபடிப் பணியைத் தொடங்கவில்லை.
இதனால், பயிர் காப்பீடு செய்வதற்கும் விவசாயிகள் தயங்குவதால், கடந்த வாரம் வரை ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் மட்டுமே பிரிமிய தொகை செலுத்தி பதிவு செய்துள்ளனர். தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் சிட்டா அடங்கல் பெறுவதற்கு பண்டிகை விடுமுறை மற்றும் நிர்வாக காரணங்களினால் விவசாயிகள் வாங்க முடியாமல் உள்ளனர்.

பல்வேறு பகுதிகளில் தொடர் விடுமுறையால் சான்றுகள் கிடைப்பதில் கால தாமதம், சர்வர் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், ஆவணங்கள் வாங்கப்படுதில்லை என்றும், இதனால் விவசாயிகளால் காப்பீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே தஞ்சை மாவட்டம் நிர்வாகம் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.