அமைச்சர் கே.என்.நேரு தம்பி ராமஜெயம் கொலையில் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட ரவுடி.அதுமட்டுமல்லாமல் திருச்சியில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜெகன் என்ற கொம்பன் ஜெகனை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த என்கவுன்ட்டர் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தில், “சிறுகனூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட சாணமங்கலம் மலைப்பகுதியை சுற்றி கடந்த சில நாட்களாகவே, அரிவாள் மற்றும் துப்பாக்கி முனையில் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீபாவளி சமயத்தில் சமூக விரோதிகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க அனுப்பி வைத்திருந்தோம். அந்த தனிப்படைக்கு சாணமங்கலம் பகுதியில் வழிப்பறி மற்றும் ஆடுகள் கடத்தப்படுவது குறித்து தகவல் வந்தது.
இந்த தனிப்படை சாணமங்கலம் பகுதியில் ரோந்து மேற்கொண்டது. ரோந்தின்போது ஒரு நபர் இவர்களை தாக்கியுள்ளார். பார்த்தவுடன் அந்த நபர் ஜெகன் என்கிற கொம்பன் ஜெகன் என்ற ரவுடி என்பது தெரியவருகிறது. ஜெகன் மீது 53 வழக்குகளும், 5 கொலை வழக்குகளும், 4 கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன. தனிப்படை அவரை அடையாளம் கண்டதும், காவல்துறையினரை அரிவாள் கொண்டு தாக்கியுள்ளார் ஜெகன். மேலும் பெட்ரோல் வெடிகுண்டு மற்றும் நாட்டு வெடிகுண்டு கொண்டும் காவலர்கள் மீது ரவுடி ஜெகன் தாக்கியுள்ளார். இதில் எஸ்ஐ ஒருவரின் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் தற்காப்புக்காக காவலர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ரவுடி ஜெகன் சம்பவ இடத்திலேஉயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின்போது காயமடைந்த காவலர்கள் தற்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு நடந்த ஆய்வில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகள், சணல் வெடிகுண்டு ஆகியவற்றை ரவுடி ஜெகன் தயாரித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரவுடி ஜெகன் இதற்கு முன்பு இதேபோல் வெடிகுண்டுகளை தயாரித்து அவற்றை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்திருக்கிறார். வளர்ந்து வரும் ரவுடிகளுக்கு கேங் லீடர் போன்று ரவுடி ஜெகன் செயல்பட்டு உள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பனையக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்ற கொம்பன் ஜெகன். இவர் மீது திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 19ம் தேதி, ஜெகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கறி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், பல்வேறு ரவுடிகள் ஆயுதங்களுடன் கலந்துகொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவரையும் கைது செய்தனர். அப்போது அங்கிருந்து ஜெகன் தப்பிச் சென்றுள்ளார்.
தலைமறைவாக இருந்த ஜெகனை, போலீஸார் தேடிவந்த நிலையில், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலத்தில் ஜெகன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு சென்ற போலீஸார் ஜெகனை பிடிக்க முயன்றுள்ளனர். போலீஸாரைத் தாக்கிவிட்டு, ஜெகன் அங்கிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது ஜெகனின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் போலீஸார் சுட்டதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், போலீஸார் மீது ரவுடி ஜெகன் நடத்திய தாக்குதலில், படுகாயம் அடைந்த உதவி ஆய்வாளர் வினோத், லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.