- கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் கருணைத் தொகையாக இருவருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாயும், இதர 21 மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் , நீதிபதி பி.பி. பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் வாதிட்டனர்.
அப்போது. , விசாரணை குழுவில் 3 அதிகாரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினர்.
சம்பவம் தொடர்பாக இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 23 மாணவிகள் மற்றும் 219 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார் .
தனியார் பள்ளிக்கு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு நிர்வாகத்தை ஏற்க அரசு தொடங்கிவிட்டதாகவும், என்.சி.சி. முகாம் நடந்த மற்ற பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான அனைத்து விவரஙக்ளையும் அப்படியே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பணிகள் குழு அறிக்கை அளித்த பின்னரும் காவல்துறை ஏன் முறையாக விசாரிக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து , பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட 23 மாணவிகளில் இருவருக்கு கருணைத் தொகையாக தலா ஐந்து லட்சம் ரூபாயும் மற்ற மாணவிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருணைத் தொகையை இரண்டு வாரங்களில் வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த தொகையை சம்பந்தப்பட்ட பள்ளியிடம் இருந்து வசூலிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், சம்பவம் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை, சிவராமன் மரணம் தொடர்பான விசாரணை நிலை குறித்து முழுமையாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.