கோவை சிங்காநல்லூர் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தேவராஜ் என்பவரை சிங்காநல்லூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். கோவை சிங்காநல்லூர் நீலிகோணம் பாளையம் பகுதியில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இந்த நிலையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழு அந்த கிளினிக்கு சென்றனர். ஜோதி கிளினிக் என்ற பெயரில் தேவராஜ் என்பவர் அங்கு மருத்துவம் பார்த்து வந்து உள்ளார்.
இணை இயக்குனரின் ஓட்டுநரை நோயாளி போல் தேவராஜிடம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விட்டு அவரை அதிகாரிகள் பின்தொடர்ந்தனர்.

தேவராஜ் அவருக்கு பல்ஸ், டெம்பரேச்சர் போன்றவை பார்த்து ஊசி போட இருந்த நிலையில் , இணை இயக்குனர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அவரை பிடித்தனர். பின்னர் அவரது ஆவணங்களை சரி பார்த்த போது , அவர் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பது தெரிய வந்தது. மருந்து கடையில் முதலில் வேலை பார்த்து வந்ததும், பின்னர் அந்த அனுபவத்தை வைத்து பொதுமக்களுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்து இருப்பதும் தெரிய வந்து உள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நீலிகோணம் பாளையம் பகுதியில் கிளினிக் நடத்தி வந்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அந்த கிளினிக்கில் அதிகாரிகள் ஆய்வு செய்த பொழுது, பயன்படுத்தப்பட்ட மருத்துவ குப்பிகள் மற்றும் மருந்து வகைகளை அதிகாரிகள் கைபற்றினர். இதனையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தரப்பட்டு, போலி மருத்துவர் தேவராஜ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலி மருத்துவர் தேவராஜை கைது செய்த சிங்காநல்லூர் போலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து போலி மருத்துவர் தேவராஜ் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பன்னிரண்டாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு, மருத்துவர் எனக்கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த விவகாரம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.