மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இழப்பீடு – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2 Min Read

மத்திய அரசின், மத்திய குழுவோடு தமிழக அரசு அதிகாரிகள் இணைந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய அரசின், மத்திய குழு உடனடியாக தமிழகத்திற்கு வருகை தந்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மழையின் காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் புகுந்து அத்யாவாசிய பொருட்கள் பெருமளவு சேதம் அடைந்துள்ளது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நீரில் முழ்கி பெருமளவு பழுதாகியுள்ளது.

சிறு, குறு, தொழில் நிறுவனங்கள், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள தொழில்பேட்டைகளுக்குள் மழைநீர் புகுந்து தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்கள், தளவாடப் பொருள்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்து இருக்கிறது. இதனால் சிறு, குறு தொழில்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த இழப்பை சந்தித்துள்ளது.

மேலும் வங்கி கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு மத்திய மாநில, அரசுகள் மற்றும் வங்கிகள் உதவியிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். மழை வெள்ளத்தால் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டு மிகுந்த சேதம் அடைந்துள்ளது. பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் விவசாயத்தை மேற்கொண்ட விவசாயிகள் மீண்டும் தொடர வேண்டுமானால் உரிய இழப்பீடு கிடைத்தால் மட்டுமே மீளமுடியும்.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் திரு.குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு தமிழகம் வருகை தந்துள்ளனர். இக்குழுவில் மேலாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நிதித்துறை, மின்சாரத்துறை, சாலை போக்குவரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை என்று பல்வேறுதுறைகளில் இருந்து அதிகாரிகள் இடம்பெற்றுள்ளர்.

மத்திய குழு ஆய்வின் போது தமிழக அதிகாரிகள் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மக்கள் வசிக்கும் பகுதிகளையும், தொழிற்சாலைகள், விவசாய நிலங்கள், சாலை போக்குவரத்து போன்றவற்றை ஆய்வு செய்ய முழு ஒத்துழைப்பு அளித்து தமிழகத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply