நாடு முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. காலை 8.30 மணியளவில் இவிஎம் இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 2024 மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்று ஜூன் 1 ஆம் தேதி நிறைவு பெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

மக்களவை தேர்தலில் 64 கோடியே 20 லட்சம் பேர் வாக்களித்ததாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ்,
சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படத் தொடங்கியுள்ளது. 8.30 மணியளவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காலை முதலே ஒவ்வொரு சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. காலை 9 மணி முதல் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.
முழுமையான தேர்தல் முடிவுகள் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மின்னணு இயந்திரங்கள் மீண்டும் பாதுகாப்பு அறைக்கு (ஸ்ட்ராங் ரூம்) கொண்டு செல்லப்பட்டு, அங்கு 45 நாட்கள் பாதுகாக்கப்படும். 6 மாதங்களுக்கு பிறகு, மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அழிக்கப்பட்டு,
அவை மீண்டும் வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்படும். மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

இதில் அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் அரசுகளின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிக்கிமில் எஸ்கேஎம் கட்சியும், அருணாச்சல பிரதேசத்தில் பாஜகவும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தன.
மீதமுள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இன்று வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் அதிகாலை 5 மணி முதலே வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவழைக்கப்பட்டு நீண்ட சோதனைக்கு பின்னர்,

வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
அவை தேர்தல் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் முன்னிலையில் சீல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.