விக்கிரவாண்டி அருகே தொழிலாளியை மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வேலியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் வயது 55. இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் கௌசல்யா. அப்போது கௌசல்யா கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே கடையில் பணிபுரிந்த திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கஸ்தம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன், இவரது மகன் கேசவன் வயது 25 என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு தனுஷ் குமார் வயது 4 என்ற மகனும் ஜென்வீஷா வயது 1 என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் கேசவனுக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது. இதனால் கேசவன் கௌசல்யாவை அவரது தாய் வீட்டிலேயே தங்க வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, வாரம் ஒரு முறை மட்டும் கேசவன் வெளியந்தல் கிராமத்திற்கு வந்து தனது மனைவி குழந்தைகளை பார்த்து விட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கேசவன் தனது மனைவி குழந்தைகளை பெங்களூருக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். இதையடுத்து கௌசல்யாவை பெங்களூருக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கௌசல்யா வர மறுத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து வெளியந்தல் கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு கேசவன் வந்துள்ளார். பின்னர் கௌசல்யாவிடம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு தன்னுடன் பெங்களூருக்கு வரும்படி கூறியுள்ளார். இதை பார்த்த ஆறுமுகம் தனது மகள் பேரக்குழந்தைகளை உன்னுடன் அனுப்பி வைக்க முடியாது என்று கேசவனிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் மாமனார், மருமகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த கேசவன் அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து ஆறுமுகத்தின் தலையில் ஓங்கி அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகம் மயங்கி கீழே விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ஆறுமுகம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் சேகர், சப் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கேசவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மாமனாரை மருமகனை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.