காதல் ஜோடிக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நுழைந்து பெண் வீட்டார் அடித்து சூறையாடினர். இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் உள்ள லெனின் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று 6 ஆண்டுகளாக காதலித்து வந்த ஜோடிக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் லெனின் சிலை முன்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த புதுமண காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள்.
இவர்களின் காதலுக்கு குடும்பத்தினர் ஒத்துழைக்காத நிலையில், அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைத்து திருமணம் செய்து வைத்தது. இதுபற்றி அறிந்த அந்த மணமகளின் வீட்டார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இத்தகைய சூழலில் திடீரென்று பெண்ணின் வீட்டார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்குள் நுழைந்து தங்கள் வீட்டு பெண்ணை அனுப்பி வைக்கும்படி அங்கிருந்தவர்களிடம் கேட்டனர்.
இந்த வேளையில் அங்கிருந்தவர்களுக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே திடீரென்று கைக்கலப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இருக்கை மற்றும் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி அறிந்தவுடன் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் பிரச்சனையை தடுக்க முயன்றனர். ஆனால் பெண் வீட்டார் ஆக்ரோஷமாக இருந்ததால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
இதை அடுத்து போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் நுழைந்து சூறையாடியது தொடர்பான புகாரில் பெண் வீட்டாரை சேர்ந்த 6 பேரை பெருமாள்புரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.