தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை ஒத்தி வைக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகைய நெருக்கடி சூழலில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையமானது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாகவுள்ள 369 பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை ஒத்திவைக்காமல், அறிவித்தப்படியே, ஜனவரி 6 ஆம் தேதியே நடத்த முடிவெடுத்துள்ளது; தேர்வர்களிடையே பெரும் பதற்றத்தையும், மன வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் பொறியியல் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை தமிழ்நாடு அரசு ஒத்தி வைக்க வேண்டும்.
எனவே, மழை வெள்ளப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு பல்வேறு அரசுப் பணித்தேர்வுகள் ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டது போன்று, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.