
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினை உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த என். முத்தமிழ்செல்வி மற்றும் திரு.ராஜசேகர் பச்சை ஆகியோர் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் என். முத்தமிழ்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோரைப் பாராட்டி, இதுபோன்று மென்மேலும் பல சாதனைகளை படைத்திட வாழ்த்து தெரிவித்தார். மேலும், விளையாட்டுத் துறையில் இதுபோன்று ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகவும், ஊக்கம் அளிக்கும் வகையிலும் விளங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், ஜோகில்பட்டியைச் சார்ந்த முத்தமிழ்செல்வி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சார்ந்த முதல் பெண் ஆவார். மே-23ஆம் தேதி மவுண்ட் எவரெஸ்ட் பகுதியை வெற்றிகரமாக அடைந்தார்.
முத்தமிழ்ச் செல்விக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியுதவியாக ரூபாய் 10 இலட்சத்திற்கான காசோலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் 28.03.2023 அன்று வழங்கப்பட்டது. மேலும், தன்னார்வ அமைப்புகள் மூலம் கூடுதலாக ரூபாய் 15 இலட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
மேலும், சென்னை கோவளம், மீனவ கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் பச்சை (வயது 28) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்திய அலைசறுக்கு வீரரான (surfing player) இவர் சென்னை-படூர் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி (B.C.A) பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் மே 19ஆம் தேதி காலை 5.30 மணிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., அலைசறுக்கு சங்க மாநில துணைத் தலைவர் வீரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை மேலாளர் மெரிசி ரெஜினா, முதுநிலை மண்டல மேலாளர் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.