
கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை மற்றும் அறிவியல் தமிழ்க்கல்லூரியில் வருகின்ற ஜூன் 18 ம் தேதியன்று நிமிர்வு கலையகம் மற்றும் பேரூராதீன கல்வி நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் பறை இசை மாநாட்டினை நடத்துகின்றனர்.
இதுகுறித்து கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் பேரூராதீன மருதாசல அடிகளார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது
கோவை பேரூர் தமிழ்கல்லூரியில் வருகின்ற ஜூன் 18″ம் தேதி உலகப்பொது இசை பறை மாநாடு நடைபெறுகிறது.
சங்க இலக்கியங்களில் சிறந்த இசைக் கருவியாக பறை இருந்துள்ளது. நிலங்களை ஐந்து வகைகளாக பிரித்து, அதற்கு தனியாக பறைகள் இருந்துள்ளன. இறைவனை புகழ்ந்து பேசும் போது பறை முக்கியமான இடத்தில் இருந்துள்ளது. காலப்போக்கில் பறை அவமங்கல அமங்கல இசையாக கருதப்படும் நிலை ஏற்பட்டது. அந்நிலையை மாற்றி பறையை மீட்டெடுக்கும் பணிகளை நிமிர்வு கலையகம் செய்து வருகிறது.பறை இசைக்கு ஊக்கம் கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த மாநாடு நடத்தப்படுகிறது. மாநாட்டில் இறையும் பறையும் என்ற நூல் வெளியிடப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி பறையிசை வெளிநாடுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய இடத்தை பெற்று வருகிறது. பறையிசை என்பது ஓசை தருவது மட்டுமல்ல. நமது மண்ணுக்கு ஏற்றது. பரதமும் பறையும் இணைந்து நடத்துவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இசைகருவிகள் கண்காட்சியும் நடத்தப்பட இருக்கின்றது. நம்முடைய இசைக்கு தமிழகத்தில் இருப்பவர்கள் தான் ஏற்றம் தர வேண்டும் பல முறை கோரிக்கை வைத்துள்ளோம். நமது இசைகளுக்கு முக்கியத்துவத்தை கொடுக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு கல்லூரிகளில் பறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.பறை இசையை மங்கலத்தில் செய்யக்கூடாது என்ற நிலை மாறி, பறையிசையோடு திருமணம் நடக்கிறது. பறை இசையை மக்களிடம் பரவலாக்கம் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் சீல் வைக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “எல்லோரும் கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய வேண்டும் என 1500 ஆண்டுகளுக்கு முந்தைய திருமறை காலத்தில் இருந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோவில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்ய வாய்ப்பு இல்லையென்றாலும், அனைவரும் கோவிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை தடுக்க கூடாது. திரையரங்குகள், பேருந்துகள், மதுக்கடைக்கு ஒன்றாக செல்வதை போல கோவில்களுக்கு உள்ளேயும் ஒன்றாக செல்ல மக்களிடம் மனமாற்றம் வர வேண்டும். அதற்கு அரசு முயற்சி எடுக்க வேண்டும்” எனப் பதிலளித்தார்.தொடர்ந்து பேசிய அவர், “ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்கள், நிலங்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். கோவில் அறங்காவலர்களாக ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களை நியமிக்க வேண்டும். அரசியல்வாதிகளாக இருந்தாலும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள். ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறார்கள். அவர்களை அறங்காவலர்களாக நியமிக்கலாம். சில கோவில்களில் இரண்டு அரசுகளும் பொது நபர்களை அறங்காவலர்களாக நியமித்து உள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.