திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஏற்கனவே செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் பேசியதாகவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசும் பேச்சுக்கள் அவதூறாகாது என்பதால், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.