“என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்” என பெயர் பெற்ற ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளதுரை என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று தமிழ்நாடு காவல்துறையில் அறியப்படுபவர்.
இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு பிரபல ரவுடியான அயோத்திக்குப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2004 ஆம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பனை என்கவுண்டர் செய்த தமிழக காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையிலும் உறுப்பினராக இருந்தார் வெள்ளதுரை.

கடந்த 2013 ஆம் ஆண்டு மருதுபாண்டியர் குருபூஜையின் போது சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தியில் காவல்துறை எஸ்.ஐ ஆல்வின் சுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ரவுடிகள் இருவர் வெள்ளதுரை டீமால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
மதுரையில் சப் இன்ஸ்பெக்டர்களை குத்திய ரவுடிகள் கவியரசு, முருகன் ஆகியோர் என்கவுண்டர் செய்யப்பட்டதன் பின்னணியிலும் வெள்ளத்துரை உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப் பஞ்சாயத்துகள் மற்றும் தொழிற்சாலை பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்கான சிறப்புப் படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார் வெள்ளதுரை.
தற்போது திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார் வெள்ளதுரை. வெள்ளதுரை மீதான என்கவுன்டர் வழக்கு சிபிசிஐடியில் நிலுவையில் உள்ளது. ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்தார். இந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் 2013 ஆண்டில் ராமு (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த வழக்கில் வெள்ளதுரைக்கு தொடர்பு இருப்பதாக இந்த சஸ்பெண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உள்துறை, வெள்ளதுரையை சஸ்பெண்ட் செய்துள்ளது. வெள்ளதுரை மீது சிபிசிஐடி பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் உள்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏடிஎஸ்பி வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசின் உள்துறையால் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.