நீதிமன்றங்களில் அம்பேத்கரின் படத்தை அகற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தியடிகள் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதாக தெரிகிறது. பாபா சாகிப் அம்பேத்கரை நீக்கம் செய்தல் என்னும் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியே உயர்நீதி மன்றத்தின் இந்த அறிவிப்பு என்று நாம் இதனை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீண்டாமைக்கு எதிரான போர்க்குணம், அயல்நாடு சென்று கடுமையாக உழைத்துப் பெற்ற பட்டங்கள், வியக்கவைக்கும் மேதைமை, உலக வட்ட மேசை மாநாடுகளில் சிறப்புமிக்கப் பங்களிப்பு, நாடாளுமன்ற அரசியல் செயல்பாடுகள் என சீரிய பணிகளைச் செய்தவர் அம்பேத்கர் அவர்கள்.

இந்தியாவின் நீதி அமைப்புகள் அம்பேத்கர் அவர்கள் இயற்றி அளித்த அரசியல் சாசன விதிகளின் வழியே செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன.
இந்திய அரசியல் சாசனத்தை எழுதும் குழுவை யார் தலைமையில் போடலாம் என்னும் தேடல் நேர்ந்த போது அம்பேத்கர் பெயரை அவர் களிடம் முன்மொழிந்தவர் காந்தியடிகள்.
டாக்டர் அம்பேத்கர் தலைமையேற்று வழங்கிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றங்களில் அவரை புறக்கணிப்பது அநீதியானது. எனவே சென்னை உயர்நீதி மன்றம் பதிவாளரின் சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.