ஏற்கனவே சென்னை கற்றுத் தந்த பாடத்தையும் கண்டு கொள்ளாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் நெல்லை, தூத்துக்குடியிலும் மழை வெள்ளத்தால் பெரும்பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டி உள்ளார்.
தூத்துக்குடியில் வரலாறு காணாத வகையில் கொட்டி தீர்த்த அதிக கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாநகரின் அனைத்து பகுதிகளும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த நிலையில் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று நேரில் பார்வையிட்டார். இதற்காக மதுரையிலிருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்து, அவர் தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களை சந்தித்து அரிசி, பருப்பு, பால், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை 1000 பேருக்கு வழங்கினார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி பக்கீள் ஓடையில் வெள்ளநீர் செல்வதை பார்வையிட்டார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மழை வெள்ளத்தால் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் உணவுக்கு திண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். உடனடியாக அவர் அதிமுக நிர்வாகிகளிடம் உணவு வழங்க ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

தமிழக அரசு சொல்வதற்கும், இங்கே வந்து பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கிற மக்களை அதிகமாக வெள்ளம் சூழ்ந்து நிற்கின்ற பகுதிகளில் இருக்கின்ற மக்களை ஆங்காங்கே இருக்கின்ற படகுகள் மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைத்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இங்கே வந்து பார்த்தபோது படகுகள் எதுவும் வரவில்லை. இரண்டு நாட்களாக சாப்பாடு இல்லாமல் இருக்கிறோம். குடி தண்ணீர் போன்ற எந்த அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காமல் தவித்து கொண்டிருக்கிறோம். அரசாங்கத்தில் இருந்து எந்த அதிகாரிகளும் வந்து பார்க்கவில்லை. எந்த உதவியும் கிடைக்கவில்லை என மக்கள் சரமாரியாக குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்கள். மக்கள் கூறிய தகவலை தான் உங்களிடம் தெரிவிக்கிறேன். அரசு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து இருக்க வேண்டும். பருவகால மழையை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து இருந்தால் இத்தகைய பாதிப்புகளை தவிர்த்து இருக்கலாம். ஆனால் அரசு முன்னேற்ற நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. ஏற்கனவே சென்னையில் மிக்ஜம் புயல் தாக்கிய போதும் அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்காததால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு நெல்லை, தூத்துக்குடியிலாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுத்திருக்க வேண்டும். தூத்துக்குடியில் அதிக கனமழை பெய்யும் என கடந்த 14ஆம் தேதியே வானிலை ஆய்வு மையம் தெளிவாகத் தெரிவித்துவிட்டது. 21 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மூலம் தமிழக அரசுக்கு தகவல் கிடைக்கும் அதற்கு ஏற்றார் போல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்று இத்தகைய பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது. பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாத்திருக்கலாம். படகு வரவில்லை. சாப்பாடு கிடைக்கவில்லை என மக்கள் கூறுகிறார்கள். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பாதிப்புகளை தவிர்த்து இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.