பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பது நாடகம் – ஆர்.எஸ் பாரதி விமர்சனம்..!

3 Min Read

பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்பது நாடகம் என்று ஆர்.எஸ் பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு திமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னையைச் சுற்றிலும், நெல்லையை சுற்றிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கி மக்கள் பணி செய்ய மனம் இல்லாமல் பொதுக்குழு என்ற பெயரால் பொழுதுபோக்கு கச்சேரி நடத்தி முடித்திருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி அதில் திமுக அரசு பற்றி வாய்க்கு வந்ததை வழக்கம் போல உளறி இருக்கிறார். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என தெளிவுபடுத்தி விட்டோம் என பொதுக்குழுவில் பேசி இருக்கிறார். கூட்டணி இல்லை என முடிவாகிவிட்டால் பாரதிய ஜனதாவை விமர்சிக்க வேண்டியது தானே. அதிமுகவை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்.

ஆர்.எஸ் பாரதி

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மத்திய அரசை கண்டித்தோ அல்லது பாரதிய ஜனதாவை கண்டித்தோ ஒரு தீர்மானத்தைக் கூட நிறைவேற்றவில்லையே ஏன்? தமிழ்நாடு அரசு தொடர்பான தீர்மானங்களின் கண்டனம். மத்திய அரசு தொடர்பான தீர்மானங்களில் எல்லாம் வலியுறுத்தல் என்பது இரட்டை முகமூடி தானே. பாரதிய ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்ற பழனிசாமியின் பச்சை பொய் நாடகத்தை மக்கள் நம்ப தயாராக இல்லை. சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளின் காரணமாக திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டதை ஏளனம் செய்து மட்டமாக கருத்து தெரிவித்து பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி. புயல் மழை வெள்ளத்தால் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் போது மாநாடு நடத்த வேண்டாம் என்று எங்கள் திமுக தலைமை முடிவெடுத்ததை அவர் பாராட்டி இருக்க வேண்டும். ஏதோ தான் சாபம் விட்டது போல சவுடால் விட்டுள்ளார். வெள்ள பாதிப்பு களத்தில் மக்களோடு நிற்கும் அமைச்சர் உதயநிதியை பற்றி பேசவே அருகதை அற்றவர் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொம்மை முதல் அமைச்சராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். சசிகலாவின் பொம்மையாக எடப்பாடி முதலில் இருந்தார். டி.டி.வி தினகரனின் பொம்மையாக மாறினார். பின்னர் மோடியின் பொம்மையாக மாறினார்.

ஆர்.எஸ் பாரதி

கமலாயத்தில் ஒரு அறையில் அதிமுக அலுவலகத்தை நடத்திக் கொள்ளும் வகையில் பாரதிய ஜனதாவுக்கு அடிமையாக சேவகம் செய்த பழனிச்சாமி எல்லாம் பேசுவதற்கு கொஞ்சமும் தகுதி இல்லாதவர். இப்போதும் அமித்ஷா ஆட்டுவிக்கும் ஆட்டத்துக்கு ஆடும் பொம்மையாக செயல்பட்டு வருபவர் தான் பழனிச்சாமி என்பது அவரது கட்சிக்காரர்களே அறிவார்கள். அதிமுக ஆட்சி எப்போது வரும் என்ற மனநிலையில் மக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக வந்த பிறகு தொடர்ச்சியாக தேர்தல் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிமுக தோல்வியை தோளில் போட்டு வளர்த்து வருகிறவர் பழனிச்சாமி. அவரால் அதிமுகவே அரை அங்குலம் கூட வளர்க்க முடியாது என்பது அக்கட்சியினருக்கே தெரியும். வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 தோல்வியை தழுவி தோல்விசாமி என்பதை அவர் மெய்ப்பிக்கத்தான் போகிறார். இதனை நாடு பார்க்கத்தான் போகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share This Article

Leave a Reply