ஆட்சிக்கு வந்ததும் நீட் பாடதொகுப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு. நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது திமுக தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் மே 5 ஆம் தேதி 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வினை எழுதினர். இந்த தேர்வு மொத்தமாக 13 மொழிகளில் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்டது.

நீட் தேர்வுக்கு முன்பாகவே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் நடந்தன. ஆனால் தேசிய தேர்வு முகமை குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தது. இந்த நிலையில் ஜூன் 4 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின.
அதில் சில மாணவர்களுக்கு 718, 719 போன்ற மதிப்பெண்கள் பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனென்றால் நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தாலும் 4 மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதேபோல் நெகட்டிவ் மார்க்காக 1 மதிப்பெண் குறைக்கப்படும் என்பதால், 715 மதிப்பெண்கள் எடுப்பதே சாத்தியம்.

இது நாடு முழுவதும் நீட் தேர்வு எழுதிய மாணவர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த தேசிய தேர்வு முகமை;- தேர்வு நேரத்தில் ஏதேனும் காரணங்களால் நேரம் வீணானால், அதற்கு ஈடாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சில மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு மட்டும் அத்தகைய சலுகை வழங்கப்பட்டது என்று தெரிவித்தது.

அதுமட்டுமல்லாமல் ஒரே தேர்வு மையத்தை தேர்வு எழுதிய 6 மாணவர்கள் அதிகபட்ச மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதனால் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூலில் ஒரு பதிவினை எழுதி இருக்கிறார். அதில், அண்மையில் நீட் தேர்வு நடந்த பெரும் முறைகேடுகளால் தேசிய அளவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது திமுக தான்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் பாடதொகுப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு. தீவிர கள ஆய்வு, மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பிடமும் கருத்து கேட்டு நீதிபதி ஏகே ராஜன் குழு அறிக்கை அளித்தது.
அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாட்டின் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக நீண்ட தாமதத்திற்கு பின் ஆளுநரால் அனுப்பி வைக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்பதை அம்பலப்படுத்திய நீதிபதி ஏகே ராஜனின் அறிக்கை பல மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டது.
தற்போது அந்த அறிக்கையை மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பஞ்சாப், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் நீதிபதி ஏகே ராஜன் அறிக்கையை வெளியிட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.