கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்கும் திட்டத்தை திமுக கைவிட வேண்டும் என்று சசிகலா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்,”கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் கரை அமைக்கும் திட்டத்தை திமுக தலைமையிலான அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், தொடர் உண்ணாவிரதம் இருந்தும், சாலைகளில் அமர்ந்தும் தொடர்ந்து போராடி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காமல் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. இந்த அணையானது காமராஜர் அவர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட மண் அணையாகும். இது ஆசியாவிலேயே மண்ணால் கட்டப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய அணையாகவும் விளங்கக்கூடியது. மேலும், இந்த அணை அரசால் கட்டப்பட்டிருந்தாலும், அணையை சுற்றியுள்ள விவசாயிகள்தான் அதற்கான முழுப் பணத்தையும் வரியாகச் செலுத்தியுள்ளனர். இந்த மண் அணை மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள கிணறு, குட்டை, போர்வெல் என அனைத்திலும் நீர் ஊறுகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.
கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் மஞ்சள், கரும்பு, வாழை, நெல், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். மேலும், ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது. சுமார் 124 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க 2009-ம் ஆண்டே அப்போதைய தி.மு.க தலைமையிலான அரசு பிள்ளையார்சுழி போட்டது. விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், தற்போது அதே திமுக தலைமையிலான அரசு, விவசாயிகளின் நலனைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் மீண்டும் இத்திட்டத்தை செயற்படுத்தியே தீர வேண்டும் என துடிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும், கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால்தான் கடைமடைப் பகுதிகளுக்குப் பாசன நீரை கொண்டு சேர்க்க முடியும் என்று ஒரு சிலர் விளக்கமளிக்கின்றனர். ஆனால், பாசன வாய்க்கால்களையும், கால்வாய்களையும், சிறு ஓடைகளையும் முறையாகத் தூர்வாரி, பழைய கட்டுமானங்களை சீரமைத்து, கரைகளை வலுப்படுத்தினாலே கடைமடைப் பகுதி வரை பாசன நீரை கொண்டு சேர்த்திட முடியும் என்பதை அனுபவம் நிறைந்த விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
எனவே, அறிவார்ந்த விவசாயிகளின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமல் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை இந்த ஆட்சியாளர்கள் செயல்படுத்தினால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதாவது, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர் மூலம் பாசன வசதி பெறுகின்ற 1 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் தரிசாக மாறும் அபாயம் உள்ளது. மேலும், வாய்க்கால் கரையோர பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கரையோரம் உள்ள கிணறுகளில் நீரின் அளவு வெகுவாக குறையும். ஏரிகள், குளங்கள், குட்டைகள் ஆகியவை வறண்டு போகும் நிலையும் ஏற்பட்டுவிடும். மேலும், பல்லுயிர் பெருக்கத்தை அழித்துச் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்திற்கும் பெருமளவு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, விவசாய பெருங்குடி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கீழ்பவானி மண் வாய்க்கால், மண் வாய்க்காலாகத்தான் இருக்க வேண்டும். இதில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை திமுக தலைமையிலான அரசு உடனே கைவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.