நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு 2500 ரூபாய், கரும்புக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது திமுக அரசு என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைதள பக்கத்தில், நேற்றைய மாலை என் மண் என் மக்கள் பயணம், தமிழகத்தின் சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட பகுதியான குறிஞ்சிப்பாடியில், தன்னெழுச்சியாகக் கூடி பேராதரவு அளித்த பொதுமக்களால் சிறப்புற்றது. இங்கு நெய்யப்படும் கைலிகள் மிகவும் பிரபலமானவை. 1200 குடும்பங்கள் நெசவுத்தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டு வருகிறார்கள். இங்கிருக்கும் வெங்கடாம்பேட்டை வேணுகோபாலசுவாமி கோவில், ஸ்ரீராமபிரான் தங்கி வழிபட்ட கோவில். ஸ்ரீராமரின் புண்ணிய பாதங்கள் பட்ட மண், வள்ளலார் ஆசிர்வதித்த மண் என்பது நமக்குப் பெருமை.
பாரதப் பிரதமர் மோடி , விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் கொண்டு வந்த நலத்திட்டங்கள் ஏராளம். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2013-14 ஆண்டில் ஒரு குவிண்டாலுக்கு 1310 ரூபாயாக இருந்தது, தற்போது 2022-23 ஆண்டில் ஒரு குவிண்டாலுக்கு 2,183 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது, கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, PM கிசான் சம்மான் நிதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 46 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.6,000, வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 18.8 லட்சம் கிசான் கடன் அட்டைகள் தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட கடன்தொகை ரூ.48,545 கோடி.

கடந்த 2014-15 முதல் 2021-22 வரை, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி ரூ.48,506 கோடி. தமிழகத்தில் பயிர் காப்பீடுக்கு செலவிட்ட நிதி ரூ.1, 231 கோடி. நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,961 கோடி. காவிரி நதியின் மேம்பாட்டிற்கு வழங்கிய நிதி ரூ.264 கோடி. ஒரு ஹெக்டேர் விவசாய நிலத்திற்கு உர மானியமாக நமது மத்திய அரசு செலவிடும் தொகை ரூ.8,909 ரூபாய். இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர், MRK பன்னீர் செல்வம், தமிழகத்தின் வேளாண்துறை அமைச்சர். திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டது.
விவசாய நிலங்களில் சிப்காட் அமைத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்பது, சென்ற ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு நெல் கொள்முதல் 3 லட்ச டன் குறைந்துள்ளது, நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் ஒரு மூட்டைக்கு 60 முதல் 80 ரூபாய் லஞ்சம் வசூலிக்கும் நிலைமை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ஒரு குவிண்டாலுக்கு 2500 ரூபாய், கரும்புக்கு 4000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்லி மக்களை ஏமாற்றியது, முதல்வர் முக ஸ்டாலின் வந்தால் வயலில் சிகப்பு கம்பளம் விரிப்பது, மத்திய அரசின் திட்டங்களில் மேல் ஸ்டிக்கர் ஓட்டுவது. இதுதான், ஒரு வேளாண்துறை அமைச்சராக இவர் செய்த சாதனை. உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்காக ஒரே நாளில் கடலூரில் 622 நிகழ்ச்சிகளை நடத்தியதுதான் இவரது பெரிய சாதனை. தன் மகன் கதிரவனுக்கு கடலூர் பாராளுமன்றத் தொகுதி கிடைப்பதற்காக மட்டுமே உழைக்கிறாரே தவிர மக்களுக்காக இல்லை.
தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சி வேண்டும் என்று விரும்புகிறார்கள். பரம்பரை பரம்பரையாக, திமுகவில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே பதவிக்கு வந்து, இளைஞர்களின் அரசியல் வாய்ப்புக்களைப் பறித்துக் கொண்டிருப்பதை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை ஆண்டு காலமாக, வேறு வாய்ப்பு இல்லாமல் மாற்றி மாற்றி வாக்களித்துக் கொண்டிருந்த மக்களுக்கு, பாரதப் பிரதமர் மோடியின் ஊழலற்ற, நேர்மையான, ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி மீது முழு நம்பிக்கை இருக்கிறது. தமிழகத்தில் இத்தகைய அரசுதான் அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.வரும் பாராளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் அரசியல் மாற்றத்திற்கான முதல் படியாக இது இருக்கும். பிரதமர் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்க, தமிழகமும் இம்முறை துணை நிற்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.