சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினராக உள்ள ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

கடந்த 2022 ஆண்டு சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்துள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது.
இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு, ஆ.ராசா, அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, மற்றும் கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட் ஆகிய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை
வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜா உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர்.
அவர்களுக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதனிடையே, அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆ.ராசா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.